ஞாயிறு, 16 டிசம்பர், 2012

இறைவன் பக்கம்

                                     அமெரிக்க ஜனாதிபதி  ஆப்ரகாம் லிங்கன் ஒரு முக்கியப் பிரச்சனையைத் தீர்க்க வழி தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தார்.அப்போது ஒரு நண்பர் வந்தார்.அவர் லிங்கனின் குழப்பத்திற்கான காரணத்தைக் கேட்டார்.
                                     லிங்கன்  அவரிடம் பிரச்சனையைச் சொல்லவே ,அந்த நண்பராலும் அதற்குத் தீர்வு சொல்ல முடியவில்லை.
       
                                                    எனவே 'நண்பரே ,நீங்கள் கலங்க வேண்டாம்.   ஆண்டவன் உங்கள் பக்கம்  இருப்பார்' என்றார்.

                                                  லிங்கனோ  அவரிடம் நண்பரே,ஆண்டவன் என் பக்கம் இருக்க வேண்டும் என்பது என் ஆசையல்ல.நான் அவர் பக்கம் இருக்க வேண்டும் என்பதே ஆசை என்றாராம்.

                                                    குழப்பத்திலும் வந்த தெளிவான பதிலைக் கேட்டு நண்பர் அசந்து போனாராம்.

                                                                     (தினமணிக் கதிரிலிருந்து )

வெள்ளி, 5 அக்டோபர், 2012

கடவுள்


                           எதை    நினைத்தால்
                          
                           மனம்    பரவசமடையுமோ,

                           எதன்     அருகாமை  

                           நிம்மதி   தருமோ,

                           எங்கே    மனம்

                          சரணமடையுமோ,

                          அது தான்,

                          கடவுள்!

புதன், 26 செப்டம்பர், 2012  • வேண்டியதைக்  கேட்பது   பிரார்த்தனை.

  • கொடுப்பதை  ஏற்பது   சமர்ப்பணம்.

  • ஏற்பவன்   இல்லாமற்  போவது  சரணாகதி.

     கையிலுள்ளவை  கட்டுப்பட்டால்  கையில்  இல்லாதவை
     கட்டுப்படும்.

     கண்ணை  மூடி   உள்ளே  எழுப்பும்  குரல்  கடல்  கடந்து  
     கேட்கும்.

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

யோக வாழ்க்கை


விளையாட்டில்  தன்னை மறந்தவன் ,ஆசையால் உந்தப்படுபவன்,அந்நிலை

தனக்குரிய அளவு கடந்த சக்தியைப் பெற்றவனாவான்.சக்தி முழுவதும் அது

போல் இறைவனை நோக்கிச் சென்றால் மனித சந்தோஷம்

பிரம்மானந்தமாகும்.

                                          ஒவ்வொரு செயலுக்குரிய திறமை தனித்திருப்பது போல்

அதற்குரிய ஆனந்தம் தனித்துள்ளது.இறைவன் தனக்குரிய ஆனந்தத்தைத்

தருகிறான்.எதை நாம் நாடுகிறோம்,எதை நம்மால் நாட முடிகிறது என்பது நம்

சுபாவத்தைப் பொறுத்தது.

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

ஆகஸ்ட்15

ஸ்ரீ பகவானின் பிறந்த தினமான ஆகஸ்ட்15 அன்று திண்டுக்கல் தியான மையத்தில் .

பரசிவவெள்ளம்


மகாகவி அவர்கள் பிரம்மஞானத்தை தாம் பெற்ற சக்தி வாய்ந்த மொழிவளத்தால் அற்புதமாக ''பரசிவவெள்ளம்'' என்ற தலைப்பில் தமிழாக்கியுள்ளார்கள்.இது ஆசான் அருட்தந்தை அவர்கள் அளித்து வரும் பிரம்ம ஞானத்திற்கு அத்தாட்சியாக உள்ளது.அருட்தந்தை அவர்கள் பிரம்மத்தை ''ALL PENETRATIVE,HIGHLY TRANSPARENT IMPERCITABLE ARK FLUID MATTER"என்று வர்ணிக்கிறார்கள்.

                                        FLUID  என்பதை  நீர் போன்ற  ஒரு பொருள் என்று கொள்ளக் கூடாது.எங்கும்,எதிலும் ஊடுருவக் கூடிய புலன் கடந்த இறைவெளியின் ஆற்றல் என்றே கொள்ள வேண்டும்.

                                       வெள் என்றால் தூய்மையான என்று பொருள்.அம் என்றால் பிரணவம் .ம் என்ற மெய் தனித்து ஒலிக்காது என்பதால் மெய்யோடு உயிர் சேர்ந்து அம் என்கிறோம்.உயிரும்,மெய்யும் சேர்ந்தால் உ+அம்=ஓம் என்றும்  கூறினார்கள் .இதையே ''பரசிவ வெள்ளம்''என்றார் கவிஞர் பெருமான்.
பகவான் ஸ்ரீஅரவிந்தர் தொடர்பால் ஆன்ம ஒளி பெற்றார்.

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

பரசிவ வெள்ளம்

பாரதத் திருநாட்டில் புதிய மறுமலர்ச்சிக்கு வித்தூன்றிய பெருமகனார்களில் ஒருவர் மகாகவி பாரதியார்.தமிழ்நாட்டின் தவப்பயனாய் எட்டையபுரத்தில் தோன்றிய தெய்வீகக் கவிஞராவார்.காலத்தின் கட்டாயமாக நாட்டில் சுதந்திர எழுச்சியை மக்களிடையே அவர் ஊன்றி வந்ததால் அவர் ஓர் சுதந்திரக் கவியாகவே சித்தரிக்கப்பட்டார்.அதனால் அவர் ஓர் மெய்ப்பொருள் உணர்ந்த மகான் என்பதையோ,பிரம்மத்தை உணர்ந்த ஞானி என்பதையோ  மக்களில் பலர் அறிந்திருக்கவில்லை.மெய்ப்பொருள் பற்றிய அற்புதமான கவிதைகளையும்  உணர்ந்தோமில்லை.காணும் காட்சிஎல்லாம் தெய்வநிலையே என்பதை கவி அவர்கள்,
                                       பாழுந் தெய்வம் பதியுந் தெய்வம்
                                       பாலை வனமும் கடலும் தெய்வம்
                                       ஏழு புவியும் தெய்வம் தெய்வம்
                                       எங்கும் தெய்வம் எதுவுந் தெய்வம்
என்று தனக்கே உரித்தான தமிழில் முழங்கினார்.
                                                                                          நன்றி;அன்பு நெறி

திங்கள், 16 ஏப்ரல், 2012

குடும்பம்


குடும்பத்திற்கு அஸ்திவாரம் போல் பல குணங்களுண்டு.ஒருவரையொருவர் பூரணமாக நம்ப முடிவது அவசியம்.
                                                           வெளிப்படையாகப் பேசும் குணம் இன்றியமையாதது.நாம் சொல்வது முழு உண்மையாக இருப்பது அவசியம்.குடும்பத்தில் ஒருவர் சொல்வதை நம்ப முடியாது என்ற நிலை ஏற்பட்டால் அதுவே முதல் கீறல்.
                                                       அதை உறுதிப் படுத்துவன இரகஸ்யம்,பொய்.பொய் சொல்லாமல் இரகஸ்யத்தைக் காப்பாற்ற முடியாது.விஸ்வாசம்,அர்ப்பணம், தியாகம்,விட்டுக் கொடுப்பது ,விடா முயற்சி,பூரணச் சத்தியம் ஆகியவற்றைக் குடும்பம் நிர்ப்பந்தப்படுத்தி நமக்களித்து நம்மை மனிதன் ஆக்குகிறது.

ஞாயிறு, 11 மார்ச், 2012

ஆன்மிகத் துளிகள்

   அவரவர்க்கு ஒரு போக்கு உண்டு.அடுத்தவருடைய வாழ்வைச் சரி செய்ய முயன்றால் சிக்கல் எழும்.
                              உதவி செய்தால் உபத்திரவம் வாராமலிராது.உதவி செய்வது என்பது பாம்புக்குப் பால் வார்ப்பது போல.உதவி செய்யும்போது நம் அகந்தைதான் செயல்படுகிறது.
                                      பிரச்சனை என்பது வாய்ப்பு.பிரச்சனைகளை வாய்ப்பாகக் கருதினால் வாய்ப்பு உருவாகும்.
                                                       முயற்சி குறைந்த பட்சம் சாதிக்கும்.ஆர்வம் அதிகபட்சம் பெற்றுத் தரும்.
                                  மனிதன் நினைத்தால் வழி பிறக்கும்.மனதினுள்ளே ஒளி பிறக்கும்.    

வெள்ளி, 9 மார்ச், 2012

ஆத்ம சிந்தனை

             மூதறிஞர் இராஜாஜி தன் 'ஆத்ம சிந்தனையில்' இவ்வாறு கூறுகிறார்.
                                       எப்போதும் வெளிப்புறத்தை விட்டு உள்ளத்தையே கவனிப்பாயாக.அதுவே சாந்தமடைவதற்கு சாதனமாகும்.உலகத்தின் உட்பொருளையும்,அதன் இயல்பையும் அறிந்து அதன் ஒரு பகுதி நாம் என்பதை மறவாதிருக்க வேண்டும்.அயலானைக் கவனிக்கும் போதும் அவன் உள்ளத்தை அறிய வேண்டும்.அப்போது தான் அவன் எதை அறிந்து செய்தான்,எதை அறியாமல் செய்தான்என்று தெரியும்.பிறர் வாழ்க்கைக்கும் நம் வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசம் தெரியும்.இது ரோமாபுரிச் சக்கரவர்த்தி மார்க்க அரேலியருடைய சிந்தனை.

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

எங்கள் குடும்பம்


வாழ்வு என்பது சமுத்திரத்திற்கு ஒப்பாகச் சொல்லப் படுகிறது.அதிலும் குடும்ப வாழ்வு என்பது ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுப்பது போன்றது.
கவனமாய் மூச்சடக்கி முக்குளித்தால் முத்தெடுக்கலாம்.கவனம் பிசகினால் மூழ்கிப் போக நேரும்.வாழ்வின் எந்தவொரு கட்டத்திலும் சிரமம் நேர்ந்தாலும்,
நம் சிறப்பான செயல்பாட்டின் மூலம் சிகரம் தொடலாம்.செயல்பாடுகள் சீர் குலைந்தால் வாழ்க்கையே கடினமாகிப் போகலாம்.வாழ்க்கைச் சிக்கலைத் தவிர்த்து
சிகரம் தொடும் ஆன்மிக வழிகள் ,
' எங்கள் குடும்பம் ' என்ற புத்தகத்திலே தவத்திரு.கர்மயோகி அவர்களால் சொல்லப் பட்டிருக்கிறது.

1. சுபாவம் மாறாது என்பது மனித வாழ்வு.சுபாவத்தை மாற்ற முயன்று வெற்றி காண்பது அன்னை வாழ்வு.

2. சத்தியம் சோதனைகள் நிறைந்தது என்பது மனித வாழ்வு ,சத்தியம் மட்டுமே சாதனைகளின் திறவுகோல் என்பது
அன்னை வாழ்வு.

3. உலகு எப்போது மாறும் எனக் கேள்வி கேட்பது மனித வாழ்வு ,தாம் மாறினால் அனைத்தும் மாறும் என்பது அன்னை வாழ்வு.

4. பக்குவம் இல்லாததால் மனப் போராட்டம் எழுவது மனித வாழ்வு ,பக்குவப்பட்ட பண்பான நிலையே அன்னை வாழ்வு.

5.புற வெற்றி ,அகக் கட்டுப்பாட்டில் உள்ளது.அகக் கட்டுப்பாட்டை அமைத்துத் தருவது அன்னை வாழ்வு.